பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி விடுவிப்பு

58பார்த்தது
பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி விடுவிப்பு
ரூ. 930 கோடி மோசடியில் ஈடுபட்டதாக பாசி நிதி நிறுவனத்துக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பிரமோத்குமாரை விடுவித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து ரூ. 930கோடி முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக திருப்பூர் பாசி நிதி நிறுவனத்துக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய நிதி நிறுவன இயக்குநரான கமலவள்ளி, திடீரென மாயமானார். பின்னர் சிலநாட்களில் திரும்பி வந்த கமலவள்ளி, மோசடி வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி தன்னிடம் ரூ. 3 கோடி வரை லஞ்சம் பெற்றதாக ஆனைமலை காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் மோகன்ராஜ், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு அப்போதைய ஆய்வாளர் சண்முகையா ஆகியோருக்கு எதிராக புகார் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், அப்போது மேற்கு மண்டல ஐஜியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மற்றும் போலீஸாருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிபிஐக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், கோவையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பிரமோத் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விவேக்குமார் சிங், வழக்கில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி பிரமோத்குமாரையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி