குரூப் 4 தேர்வு: 15. 8 லட்சம் பேர் பங்கேற்பு

63பார்த்தது
குரூப் 4 தேர்வு: 15. 8 லட்சம் பேர் பங்கேற்பு
அரசுப் பணிக்கான குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. வினாத்தாளில் தமிழ் பகுதி தவிர்த்து இதர கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6, 244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு மாநிலம் முழுவதும் 7, 247 மையங்களில் இன்று காலை 9. 30 முதல் 12. 30 மணி வரை நடைபெற்றது.

இந்த தேர்வெழுத மொத்தம் 20 லட்சத்து 36, 774 பேர் பதிவு செய்திருந்தனர். அதில் சுமார் 78 சதவீதம் தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 15. 88 லட்சம் பேர் வரை தேர்வில் பங்கேற்றனர். மேலும், 4. 48 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை. சென்னையில் 432 மையங்களில் நடத்தப்பட்ட குருப் 4 தேர்வை ஒரு லட்சம் பேர் வரை எழுதினர்.

குரூப் 4 தேர்வில் தமிழ் பிரிவு மட்டும் சற்று கடினமாக இருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பாக தேர்வர்கள் சிலர் கூறும்போது, வினாத்தாளில் தமிழ் பகுதி தவிர்த்து மற்ற பொது அறிவு, கணிதம் போன்ற பிரிவுகளில் கேள்விகள் எளிதாகவே இருந்தன என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி