எளிதில் அணுக முடியாத, போக்குவரத்து வசதியற்ற மலைக் கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் ரூ. 1.60 கோடி செலவில் வாங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
108 அவசர கால வாகனங்கள் உள்ள இடங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான இணைப்பு வாகனமாக இவ்வாகனங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலைக் கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் ரூ. 1.60 கோடி செலவில் வாங்குவதற்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
போக்குவரத்து வசதியற்ற பகுதிகளில் உள்ள பயனாளிகளை உரிய 108 அவசர கால வாகனங்கள் உள்ள இடங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான இணைப்பு வாகனமாக இவ்வாகனங்கள் செயல்படும். எளிதில் அணுக முடியாத, 10 மாவட்டங்களில் உள்ள மலைக் கிராமங்களை தேர்ந்தெடுத்து, அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கும் மற்றும் இதர மக்களுக்கும் இந்த இருசக்கர முதலுதவி வாகனங்கள் உடனடி சேவை செய்யும். இந்த இருசக்கர அவசரகால வாகனத்தில் ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.