சென்னை வந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல்மரி தலைமையிலான குழுவினர், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
2022 மார்ச் மாதம் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், துபாய் மற்றும் அபுதாபி நாடுகளுக்குச் சென்றார். அப்போது அங்கு தொழில்துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுவைச் சந்தித்து பேசினார். மேலும், பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் தொடங்க தமிழகம் வரும்படி அழைப்பு விடுத்தார். இதையடுத்து, துபாயில் ரூ. 2, 600 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின் அபுதாபி சென்ற முதல்வர் மு. க. ஸ்டாலின் அங்கும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஐக்கிய அரபு அமீரகத்திலும் முதலீட்டாளர்களை சந்தித்தார்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல்மரி தலைமையிலான குழுவினர் 4 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளனர்.