ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் உள்பட 27 பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னையில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரன், அவரது மகன் வழக்கறிஞர் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், வழக்கறிஞர் அருள், ராமு, திருமலை, மணிவண்ணன், சிவா, அப்பு என்ற விஜய், கோழி என்ற கோகுல், சந்தோஷ், செல்வராஜ், அஞ்சலை, பொற்கொடி, மலர்கொடி என மொத்தம் 28 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதில் ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைமறைவாகவுள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக வேலூர் சிறையில் இருந்து ரவுடி நாகேந்திரனும், பூந்தமல்லி, சைதாப்பேட்டை, புழல் உள்ளிட்ட சிறைகளில் இருந்து மற்ற 26 பேரும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர்.