சென்னை திருவொற்றியூர் வடக்கு ரயில்வே சாலையை சேர்ந்தவர் ஜெயா. இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஆகாஷ்குமார் என்ற குள்ளப்பேட்டா (22). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
நேற்றிரவு ஜெயா, மளிகை பொருட்கள் வாங்குவதற்காக மகனை வீட்டின் உள்ளே உட்காரவைத்துவிட்டு கதவை பூட்டி சாவியை பக்கத்தில் மறைத்துவைத்து விட்டு சென்றுள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த 3 பேர் இதை நோட்டமிட்டு ஜெயா சென்றதும் அவர்கள் சென்று பக்கத்து வீடுகளில் முகவரி கேட்பதுபோல் விசாரித்துள்ளனர். இதன்பிறகு நைசாக சென்று சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே தூங்கிக்கொண்டிருந்த ஆகாஷ்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஆகாஷ்குமார் பரிதாபமாக இறந்து கிடந்தார். இதனிடையே கடையில் இருந்து திரும்பிய தாய், மகன் ரத்தவெள்ளத்தில் இறந்துகிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.