தூத்துக்குடியில் உயிருக்கு பயந்து ஓடிய அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது ஜீரணிக்க முடியாத ஒன்று என போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு கொடுத்து வழக்கைமுடித்து வைத்தது நியாயமில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13பேர் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்தது. பின்னர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றிதிபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.