கொரோனா பரவலின்போது பயணிகள் ரயில்களுக்கு பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவை வழக்கமான ரயில் எண்களாக மாற்றப்பட உள்ளன. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள கிராமங்கள், சிறு நகரங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து சாதனமாக பயணிகள் ரயில்கள் உள்ளன. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் ஓடுகின்றன.
இந்த ரயில்கள் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவலின்போது பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண்ணுடன் பயணிகள் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டன. சிறப்பு விரைவு ரயிலுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கிடையே, குறுகிய தூரம் இயக்கப்படும் சாதாரண பயணிகள் ரயிலின் கட்டணம் கடந்த பிப்ரவரியில் குறைக்கப்பட்டது. அதன்படி, அனைத்து மெமு, பயணிகள் ரயில்களில் 2-ம் வகுப்பு சாதாரண கட்டணம் ரூ. 30-ல் இருந்து ரூ. 10 ஆக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் 288 பயணிகள் ரயில்கள், நீலகிரி மலை ரயில் பாதையில் ஓடும் 8 பயணிகள் ரயில்கள் என பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண் கொண்ட 296 ரயில்களின் எண்கள், வழக்கமான ரயில் எண்களாக மாற்றப்பட உள்ளன. சென்னை எழும்பூர் - புதுச்சேரி, சென்னை கடற்கரை - மேல்மருவத்தூர், சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் இதில் இடம்பெற்றுள்ளன.