வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில், வரும் 10ம் தேதிக்குள் சுமார் 500 சாலைகளை சீரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மணப்பாக்கம், முகலிவாக்கம், ராமாபுரம், போரூர், மடிப்பாக்கம் போன்ற கூடுதல் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்பேரில், சென்னை மாநகரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல், இரவில் சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் எங்கு சாலைகள் அமைக்கப்படுகின்றன. சாலை அமைக்கப்பட்ட தெருவின் பெயர், ஒப்பந்ததாரர் பெயர், சாலையின் வகை, பொறியாளர் யார் என அனைத்து விவரங்களையும் மாநகராட்சி சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் சென்னையில் எங்கெல்லாம் சாலை அமைக்கப்படுகிறது என்பதை எளிதாக மக்களால் அறிந்துகொள்ள முடியும்.
பேசின் பவர் ஹவுஸ் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, மண்டலம் 13ல் உள்ள சர்தார் பட்டேல் சாலை, மண்டலம் 11ல் உள்ள ஸ்ரீதேவி குப்பம் மெயின்சாலை, மண்டலம் 13ல் உள்ள கல்கி குப்பம் சாலை (திருவான்மியூர் சிக்னல் அருகே), மண்டலம் 6ல் உள்ள தேவநாதன் சாலை, மண்டலம் 13ல் உள்ள பெசன்ட் அவின்யூ (அவ்வை இல்லம் அருகே), மண்டலம் 4ல் உள்ள எத்திராஜ் சாமி சாலை (எதிராஜ் காலேஜ்), மண்டலம் 8ல் உள்ள நியூ ஆவடி சாலை (பச்சையப்பா கல்லூரி எதிரே) என 9 இடங்களில் ஒரே நாள் இரவில் சாலை அமைக்கப்பட்டுள்ளன.