காவிரிப் பாசன பகுதி மாவட்டங்களில் அக்டோபர் 11ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு மதிமுக ஆதரவு என வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கர்நாடக மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் அங்கு தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு துணை போனது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என கர்நாடகத்தில் போராட்டத்தை தூண்டிவிட்டு
போராட்டம் நடத்தி வரும் பா. ஜ. க மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்தும், எஞ்சிய குறுவைப் பயிரை பாதுகாத்திட, சம்பா சாகுபடியை தொடங்கிட தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட வலியுறுத்தியும், தமிழக அரசு பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்திய பின்பும் பாராமுகமாக செயல்படும் ஒன்றிய
பாஜக அரசை கண்டித்தும், காவிரிப் படுகை பாதுகாப்புக் கூட்டியக்கம் சார்பில், அக்டோபர் 11ம் தேதி காவிரிப் பாசனப் பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை , கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்பு மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் மறியல்
போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் முழு அடைப்பு மற்றும் மறியல்
போராட்டம் வெற்றி அடைய முழு முயற்சியுடன் பணியாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.