அடுத்து வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு மற்றும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள பணிகளை ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, 1913 கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வாப்பெற்ற புகாருக்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்குப் பருவமழை நிலையில் தொடங்கவுள்ள அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை, தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.