இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் முதன்மைத் தொழிலாகவும், கிராமப்புற மக்களின் வாழ்வுக்கு ஆதாரமாகவும் விளங்குகின்ற வேளாண் தொழிலை பாதுகாப்பதிலும், விவசாயப் பெருங்குடி மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை அளிப்பதிலும் முனைப்புடன் செயல்பட வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. இதற்கு முற்றிலும் முரணாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற அரசாக கடந்த இரண்டரை ஆண்டு கால தி. மு. க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.
முதலமைச்சர் அறிக்கையில், 40, 000 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வாடியிருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் வெறும் 610 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருப்பதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இன்றைய நிலவரப்படி கணக்கிட்டால், இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுத்து, அதன் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப, ஒரு ஏக்கருக்கு 30, 000 ரூபாய் வழங்கிட உடனடி உத்தரவினைப் பிறப்பிக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.