சென்னையில் கட்டிடக் கழிவுகளை கொட்ட அங்கீகரிக்கப்பட்ட 15 இடங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கட்டிட கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் சட்டவிரோதமாக பொது இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது.
இதைத் தடுக்கும் பொருட்டு, இக்கழிவுகளை சேகரித்து செல்வதில் ஈடுபட்டுள்ள தனியார் லாரி உரிமையாளர்கள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி அத்தகைய கழிவுகளை, மாநகராட்சியால் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் எவ்விதமான கட்டணமுமின்றி இலவசமாக கொட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு மண்டலத்திலும் தலா ஒரு இடம் என 15 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கட்டிட கழிவுகளை ஏற்றிச் செல்லும் விருப்பமுள்ள தனியார் லாரி உரிமையாளர்கள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் கட்டிடக் கழிவுகளை கொட்டுவதற்கான இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட கழிவு சேகரிப்பாளர்களாக பதிவு செய்திட திடக்கழிவு மேலாண்மைத் துறைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.