தமிழகத்துக்கு வரும்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மக்களை திசைத் திருப்புவதற்காக ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை பரப்புவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்துக்கு வருகை புரிகிற பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மக்களை திசை திருப்புவதற்காக ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்பதற்காக சோனியா காந்தி குடும்பத்தின் மீதும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மீதும் சேற்றை வாரி இறைத்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியை குடும்ப கட்சி என்று சொல்கிறார்கள். கீரல் விழுந்த கிராமபோன் ரிக்கார்டை போல திரும்பத் திரும்ப இந்த குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள். விடுதலைப் போராட்டத்தில் 3, 256 நாட்கள் சிறையில் இருந்த ஜவஹர்லால் நேரு, காந்தியடிகளின் பரிந்துரையின் பேரிலும், மக்கள் பேராதரவினாலும் 1947 முதல் 17 ஆண்டுகாலம் பிரதமராக இருந்து நவீன இந்தியாவின் சிற்பி என்ற பெயரைப் பெற்றார்.