வேளச்சேரி ஏரியில் விடப்படும் கழிவுநீரால் ஏரி மாசுபட்டு இருப்பதாக கடந்த 2020-ம் ஆண்டு நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது.
மேலும், வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்க துணைத் தலைவர் எஸ். குமாரதாசன் கடந்த 2021-ம் ஆண்டு, வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்குகள் தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர், நீர்வள ஆதாரத்துறை அதிகாரி உள்ளிட்டோரை கொண்ட கூட்டுக்குழுவை அமைத்து ஆய்வு செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கூட்டுக்குழு தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளச்சேரி ஏரியின் உண்மையான பரப்பளவு 107. 48 ஹெக்டேர். அரசுத் துறைகளுக்கு ஏரி பகுதிகள் ஒதுக்கப்பட்டதால் 22. 4 ஹெக்டேராக குறைந்துவிட்டது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு 21. 44 ஹெக்டேர், தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு 56. 39 ஹெக்டேர், அதே வாரியத்துக்கு அங்கீகரிக்கப்படாமல் 3. 17 ஹெக்டேர், நெடுஞ்சாலைத்துறைக்கு 0. 04 ஹெக்டேர் ஒதுக்கப்பட்டுள்ளது.