திமுக ஆட்சி அவலங்களை எடுத்துச்சொல்ல சுற்றுப்பயணம்: இபிஎஸ்

0பார்த்தது
2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில், சுற்றுப்பயணத்துக்கான பாடல், லோகோவை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, இப்போது நடக்கும் திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களையும், மக்கள் படும் துன்பங்களையும் எடுத்துக்காட்டும் விதமாகவே எனது தேர்தல் சுற்றுப்பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்குகிறேன். 234 தொகுதிகளுக்கும் நான் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்கவுள்ளேன்.

எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையவுள்ளன. அப்போது மேலும் பலம் வாய்ந்த கூட்டணியாக எங்கள் கூட்டணி அமையும். கூட்டணி குறித்து விஜய் எடுத்துள்ள முடிவு அவரின் நிலைப்பாடு. ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளை விமர்சனம் செய்வது வழக்கமானதுதான், அதன்படியே விஜய்யும் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியை அகற்றும் நோக்கத்தோடு உள்ள கட்சிகள் எங்களோடு இணையலாம். திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் இணையவேண்டும் என்பதே எனது விருப்பம். கூட்டணி நிலைப்பாடு குறித்து அமித்ஷா ஏற்கெனவே தெளிவாக சொல்லிவிட்டார். இதில் மீண்டும் மீண்டும் கேள்வியெழுப்ப தேவையில்லை என்று தெரிவித்தார்.

டேக்ஸ் :