தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிபிஐ விசாரித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022ம் ஆண்டு மே 18ம் தேதி தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது.
அதில், இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்திருந்தது. ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், ஏற்கெனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கூறி, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அரசாணை பிறப்பித்தது.