மக்கள் நமக்கு மகத்தான வெற்றியைத் தந்திருக்கிறார்கள். அதைக் கொண்டாடுவது என்பது மக்களுக்கான நமது பணியின் மூலமாகத்தான் இருக்க வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 2022-ம் ஆண்டு விருதுநகரிலே நடைபெற்ற முப்பெரும் விழாவிலே நான் உரையாற்றும்போது, ‘நாற்பதும் நமதே. நாடும் நமதே’ என்ற முழக்கத்தை முதன் முதலில் முன்வைத்தேன். அது முழக்கமாக மட்டும் இருந்து விடக்கூடாது, முழுமையான வெற்றியாக விளைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை பூத் வாரியாக மேற்கொண்டது திமுக. ஒவ்வொரு நாளும் கட்சி நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தேர்தல் தயாரிப்புப் பணிகளின் நிலவரம் குறித்துக் கேட்டறிந்தேன். நானும் ஓய்வெடுக்கவில்லை. திமுக தொண்டர்களாம் உங்களையும் ஓய்வெடுக்கவிடவில்லை.
தமிழகத்திலும் இந்திய அளவிலும் நமது கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்துக்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள் அரும்பியுள்ளன. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழிநடத்தும் பணியை இண்டியா கூட்டணி மேற்கொள்ளும். அதற்கு நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும் என்று முதல்வர் கூறியுள்ளார்.