பச்சைத் தமிழகம் கட்சி வேல்முருகன் தலைமையில் இயங்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்து தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் சுப. உதயகுமார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பச்சைத் தமிழகம் கட்சி தோழர் தி. வேல்முருகன் தலைமையில் இயங்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்து தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறது. இப்படியாக நாலாபுறமும் நாலாவிதமான நயவஞ்சகங்களும் நம்மைச் சூழ்ந்து நிற்கும் நிலையில், நம்முடைய தமிழ் மொழியை, தமிழ் மண்ணை, தமிழ் மக்களைக் காத்துக்கொள்ளும் பெரும் பொறுப்பும், கடமையும் நம் அனைவருக்கும் இருக்கின்றன.
குறிப்பாக, தமிழ்த் தேசிய அரசியலைப் பரவலாக்கி, உண்மை, நேர்மை, உறுதி, ஒழுக்கம் போன்ற விழுமியங்களோடு அதனை முன்னெடுத்து இயங்குவது காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது. பொய், புரட்டு, புனைகதைகள், நாடகம், நடிப்பு அனைத்தையும் புறந்தள்ளி; சாதி மதம் பாராது; சினிமாத்தனங்களைக் கைக்கொள்ளாது; தமிழர் விடிவுக்கு புதிய வழிகள் காணப் புறப்படுகிறோம். இனிமேல் "பச்சைத் தமிழகம் கட்சி" "பச்சைத் தமிழகம்" எனும் பெயரில் ஒரு சுற்றுச்சூழல் இயக்கமாகச் செயல்படும். "பசுந்தமிழம்" இவ்வியக்கத்தின் இதழாகத் தொடர்ந்து வெளிவரும். "இனியொரு விதி செய்வோம்" - என்றும் தமிழ், தமிழர், தமிழ்நாடு காப்போம்! ' எனத் தெரிவித்துள்ளார்.