சென்னையில் நேற்றிரவு தொடங்கி பரவலாக மழை தொடரும் நிலையில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த அவசர கால கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஆய்வு செய்தார்.
பின்னர் பேசிய அவர், சென்னையில் நேற்றிரவு தொடங்கி மழை பெய்தாலும் எந்தப் பகுதியிலும் பெரிதாக மழைநீர் தேங்கவில்லை. இனிமேல் கனமழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.
ஆய்வுக்குப் பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, முதல்வரின் உத்தரவின்படி இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை நாங்கள் ஆய்வு செய்திருக்கின்றோம். முன்னேச்சரிகை நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தோம்.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 22, 000 நபர்கள் பணியில் இருக்கின்றனர். மழைநீர் சேகரிப்பிற்காகதான், மழைநீர் கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து கட்டிடங்களுக்கும் மழைநீர் சேகரிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது என அவர் கூறினார்.