தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை மூலம் மூத்த அமைச்சர் துரை முருகன் வீட்டில் சோதனை நடத்தியது எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வன்மம் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற முயற்சி கூட்டாட்சி கோட்பாட்டை அழித்தொழித்து விடும், மாநில உரிமைகளை பறித்து, தனி நபர் மையப்பட்ட சர்வாதிகாரத்திற்கு கொண்டு செல்லும் என இடதுசாரி கட்சிகளும், திமுகவும் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும் தீவிரமாக எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில் மோடியின் ஒன்றிய அரசு அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளை அரசியல் கருவிகளாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டவும், உடைக்கவும் பயன்படுத்தி வருகிறது.
அதானியை காப்பாற்றி வரும் மோடியின் மத்திய அரசு, தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை மூலம் மூத்த அமைச்சர், திமுக தலைவர் துரை முருகன் வீட்டில் சோதனை என்ற பெயரில் தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜகவின் அதிகார அத்துமீறலையும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வன்மத்தையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.