குற்றவாளிகளின் கூடாரமாக திகழ்கிறதா திராவிட மாடல் அரசு? என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழும்புகிறது.
ஒவ்வொரு நாளும் விடியும் பொழுது படுகொலைச் சம்பவங்கள், போதைப்பொருள் புழக்கம், குற்றச் செயல்களும் அதிகரித்து வருகிறது. ஸ்டாலின் அரசு பொறுப்பேற்று இந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற போர்வையை உடுத்திக் கொண்டு போதைப்பொருள் புழக்கம், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என எல்லா கொடுஞ்செயலுக்கும் பின்னால் திமுக நிர்வாகிகள் இருந்து வருவது மக்களை வேதனை அடையச் செய்கிறது.
மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்திற்குள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல் துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.