தமிழ்நாட்டின் அரசு பல்கலைக்கழகங்களில் 7 ஆயிரம் மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர் என்ற வாக்கியத்துடன், 'அதற்கேற்ற கல்வியறிவும், திறமையும் இல்லை' என ஆளுநர் பேசியிருப்பது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு விடுக்கப்படும் நேரடியான அவமதிப்பு என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் படிப்பறிவில், கல்வித்தரத்தில் சிறந்து விளங்கும் ஒரு முக்கிய மற்றும் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டின் கல்வி மேம்பாட்டை, தரத்தை பொய்யான வகையில் திரிக்கும் நோக்கத்துடன் ஆளுநரின் கருத்து இருக்கிறது. மாண்புமிகு என்ற வார்த்தைக்கு தகுதியாக நடந்துகொள்வதே இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. உடனடியாக, ஆளுநர் இந்த அவமதிப்பான கருத்தை வாபஸ் பெற்று, தமிழக மக்கள் மத்தியில் மன்னிப்புக் கேட்கவேண்டும். இல்லையெனில், அவருக்கு எதிராக, ஜனநாயக வழியிலான எதிர்ப்பு மேலும் வலுப்பெறும் என்பதை எச்சரிக்கின்றோம்.
ஆளுநர் போன்றோரின் இதுபோன்ற இட்டுக்கட்டு கதைகள் நாளைய வரலாறாக மாறும் அபாயம் இருக்கிறது. மாணவர்கள், கல்வியாளர்கள், பன்னாட்டு தமிழர்கள் போன்றோரின் உணர்வுகளை பாதிக்கும் ஆளுநரின் இத்தகைய கருத்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன் என அவர் கூறியுள்ளார்.