ஓட்டேரி, மங்களாபுரம், சாஸ்திரி நகரைச் சேர்ந்த (36) வயது பெண், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். கணவரை பிரிந்து வாழும் இவருக்கு நுங்கம்பாக்கம், ஷெனாய் நகரைச் சேர்ந்த லாரன்ஸ், (35), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த எட்டு மாதங்களாக நுங்கம்பாக்கத்தில் தனியாக வசித்துள்ளனர்.
இந்நிலையில், லாரன்சுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த 36 வயது பெண், லாரன்சை பிரிந்து, தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 22ம் தேதி இரவு, மதுபோதையில் அப்பெண் வீட்டிற்கு சென்ற லாரன்ஸ், அவரிடம் வீண் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் தோள்பட்டை மற்றும் கையில் வெட்டிவிட்டு தப்பியுள்ளார்.
பலத்த காயமடைந்த அப்பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து விசாரித்த ஓட்டேரி போலீசார், தலைமறைவாக இருந்த லாரன்சை, நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.