பெரம்பலூர் மாவட்டம் அ. மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 2 பேர் தங்களது சீருடையுடன் உடலில் இலை தழைகளை கட்டியவாறு பொதுமக்கள் சிலருடன் ஆட்சியரகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது பச்சை மலையில் இருந்து உருவாகிவரும் கோரையாற்றில் 2 வாய்க்கால்கள் இருப்பதாகவும், தற்போது இந்த வாய்க்கால்களின் குறுக்கே முனியப்பன் கோவில் பகுதியில் தடுப்பணை கட்டப்படுவதாகவும், அவ்வாறு கட்டப்படும் தடுப்பணையில் ஒரு வாய்க்காலில் மட்டும் தண்ணீர் செல்லும் வகையிலும், மற்றொரு வாய்க்கால் முற்றிலுமாக மறிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.
மேலும் இவ்வாறு மறிக்கப்படுவதால் தண்ணீர் செல்லாத வாய்க்கால் பகுதியில் உள்ளவர்களின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அங்குள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் அகல பாதாளத்திற்கு சென்றுவிடும் என்றும், வழக்கம் போல 2 வாய்க்கால்களிலும் தண்ணீர் செல்லும்படி தடுப்பணையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கடந்த வாரம் மனு கொடுத்திருந்தனர். இந்த மனு மீது அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தவர்கள் நூதன முறையில் மனு கொடுப்பதற்காகவும், ஆட்சியரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் தங்களது ராணுவ சீருடையுடன் உடலில் இலை தழைகளை கட்டிக்கொண்டு தேசிய கொடியை ஏந்தி மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தனர்.