பெரம்பலூர் - அரியலூர் சாலையில் மறியல்: பரபரப்பு

6594பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 5000 திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தாலுக்கா தலைநகராக உள்ள இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கடந்த சில வாரங்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வழங்கப்படாததால் இரவு சமைக்க கூட தண்ணீர் இல்லை என்ற நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆவேசமடைந்து பெரம்பலூர் - அரியலூர் சாலையில் குன்னம் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசாரும், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலரும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இனி முறையாக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் தங்கள் போரட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் பெரம்பலூர் - அரியலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி