தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே அக்கட்சியின் வெற்றி மாநாடு அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று காலை பெரம்பலூர் மாவட்ட தொண்டர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்த் பேசும்போது, கட்சியில் கட்டுப்பாடு, ஒழுக்கம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாநாட்டிற்கு வந்து செல்லும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அமைதியான முறையில் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பாதுகாப்பாக முறையான வாகனங்களில் வந்து செல்ல வேண்டும் என்றார். மேலும் கட்சியில் அனைவரும் நமது தலைவர் விஜய்க்காக உழைக்க வேண்டும் என்றவர், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சியில் உழைப்பவர்களுக்கு மட்டுமே, கிளை முதல் மாநில அளவிலான பதவிகள் கிடைக்கும் என்று தெரிவித்தார். மேலும் நமது மாநாட்டிற்கு ஒவ்வொருவரின் வீட்டிற்கும் நேரில் வந்து கட்சியின் தல
ைவர் விஜய் அழைத்ததாக எண்ணி அனைவரும் குடும்பத்தோடு மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.