அரியலூர் - கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டி முடித்து விட்டு திருவாரூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தண்ணீரை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் கிராமத்தை ஒட்டியுள்ள கொள்ளிடம் ஆற்றில் அரியலூர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடையே திருவாரூர் மாவட்டத்திற்கான கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக மிகப்பெரிய அளவில் ராட்சச கிணறு மற்றும் ராட்சச போர்வெல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2024 ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தினந்தோறும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியை சுற்றியுள்ள அன்னிமங்கலம், ஆலம்பாடி, மேட்டூர், விரகாலூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 80 சதவீத நிலங்கள் பாலைவனமாக மாறும் சூழல் உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் குலமாணிக்கம் கிராமத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.