கஞ்சா வழக்கில் தொடர்புடைய நபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பழைய பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த 01.06.2025 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக பாரதிராஜன் (வயது 43) த/பெ இடும்பன் என்பவரை அரியலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் வழக்கு பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பாரதிராஜன் திருச்சி மாவட்டம் இராம்ஜி நகரை சேர்ந்தவர். இவர் காவல்துறையினரால் கெட்ட நடத்தைக்காரர் என்று அடையாளம் காணப்பட்டவர்.
மேலும் இவர் மீது பல கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பாரதிராஜன் வெளியே வந்தால் மேலும் பல்வேறு குற்ற சம்பவங்கள் ஈடுபடக்கூடும் என்பதாலும், சமூகத்திற்கு கேடு விளைவிக்கக்கூடும் என்பதாலும் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க அரியலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. சித்ரா அவர்கள் கோரியதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் எதிரி பாரதிராஜனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்கள். இதன் அடிப்படையில் அதற்கான ஆணை பிரதிகள் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.