அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடுவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பொ. இரத்தினசாமி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116. 360 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஒரிரு தினங்களுக்குள் 120 அடியை எட்டும் என்றும், எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகளவு இருக்கும்;. எனவே, அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் எனவும் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் ‘செல்பி” (selfie) எடுப்பதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பொ. ரத்தினசாமி, கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச. செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.