அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே. அய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர், அருள்மிகு பாலமுருகன், பாப்பாத்தி அம்மன், முனியப்பர், கருப்பன், பெரியநாயகி அம்மன் ஆலய சுவாமிக்கு மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு நேற்று முதல் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும் விக்னேஸ்வரர் பூஜை லட்சுமி பூஜை, கோ பூஜை, உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து முதல் கால யாக பூஜை நடைபெற்று வந்த நிலையில் இன்று இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் பல்வேறு புனித தளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை யாகசாலையில் வைத்து பூஜை செய்த சிவாச்சாரியர்கள் புனித நீரை தலையில் சுமந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயில் ராஜகோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் கோயில் கோபுரத்தை சுற்றி கருட பகவான் வட்டமிட ராஜ கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கும்பாபிஷேகத்தை செய்து வைத்தனர். அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த நிலையில் புனித நீர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் அருள்பிரசாதமும் வழங்கப்பட்டது.