பெரம்பலூர்: "முறத்தால் பக்தர்களை அடிக்கும்" விநோத திருவிழா

1546பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் திரெளபதி அம்மன் சமேத தர்மராஜா கோவில், "முறத்தால் பக்தர்களை அடிக்கும்" விநோத திருவிழாவில் திரளானோர் சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்திருக்கோவிலில் பஞ்ச பாண்டவர்கள் போற்றும் பிரம்மனால் வழிபட்ட ஊர் என்பதாக ஐதீகம் கூறப்படுகிறது. இத்திருக்கோவிலில் திருவிழா கடந்த 31-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியதை தொடர்ந்து அர்ச்சுனன் வில்வளைத்தல், திரெளபதை அம்மன் திருக்கல்யாணம், உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான "முறத்தால் அடிக்கும் விழா" ஜூன் ஏழாம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கோவிலில் இருந்து பல்வேறு வேடமிட்டு மருளாளிகள் ஊர்வலமாக வந்து அருகில் உள்ள ஏரிக்கரையில அர்ச்சுனன் மாடு திருப்புதல் விழாவும், அதனையடுத்து வல்லாளகோட்டை இடித்து மருளாளிகள் "முறத்தால் பக்தர்களை அடிக்கும்" நிகழ்வும் நடைபெற்றது.

இவ்விழாவில் முரத்தால் அடி வாங்கினால் பேய், பில்லி சூனியம் பயம் தெளியம், நினைத்த காரியம் நடக்கும் என்பதால் திரளான பக்தர்கள் முரத்தால் அடி வாங்கினர், இவ்விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி