காவேரிப்பாக்கம் நூலகத்தின் சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை

காவேரிப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் 1999 முதல் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 3,532 வாசகர்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். 4,972 புத்தகங்கள் பயன்பாட்டில் உள்ளன. நூலகத்தில் பதிக்கப்பட்ட டைல்ஸ் சேதம் அடைந்து விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியுள்ளது. இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். 

நூலகத்தின் முகப்பு பகுதியில் அமைந்துள்ள சுற்றுச்சுவர், கேட் சேதமடைந்து காணப்படுகின்றன. ஜன்னல் கண்ணாடிகள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளன. நுழைவு பகுதியில் அமைந்துள்ள பெயர் பலகையில் வேலூர் மாவட்ட கிளை நூலகம் என்றும், மற்றொரு பக்கத்தில் வட ஆற்காடு மாவட்ட கிளை நூலகம் என்றும் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை தனி மாவட்டமாக பிரித்து 6 ஆண்டுகள் ஆகும் நிலையில் மாவட்ட பெயர் மாற்றப்படாமல் இருப்பது வாசகர்கள், மாணவர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து நூலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி