திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கோ. குமரன் தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் கே. துரைராஜ், பரிமளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கி.ஊ.) மெ. பிரித்திவிராஜன், கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் உதவி இயக்குநர் முத்துராமன் வரவேற்றார். 

கூட்டத்தில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட நந்தன் கால்வாய் திட்டம் விரிவாக்கத்துக்கு ரூ. 304 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை வரவேற்று கட்சி சார்பற்ற விவசாய சங்க மாவட்டச் செயலர் நார்த்தாம்பூண்டி ஜெ. சிவா, ஏரிப் பாசன சங்கத் தலைவர் ஜி. சரவணன் ஆகியோர் தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அரசு அலுவலர்கள், வேளாண் பிரதிநிதிகளுக்கு இனிப்பு வழங்கினர். 

மேலும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அரசுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், இத்திட்டத்துக்கு துணைபுரிந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ. வேலு, பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி