தஞ்சை: தந்தை கண் முன்னே லாரி மோதி 13 வயது மகன் பரிதாப பலி

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தந்தை கண் முன்பே லாரி மோதி மகன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முரட்டு சோழகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சரவணன் (13). இந்நிலையில் இன்று மாரிமுத்து தனது மகன் சரவணனுடன் செங்கிப்பட்டிக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக தனது பைக்கில் வந்தார். மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு மீண்டும் இருவரும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆச்சாம்பட்டி புதுப்பாலம் அருகே மாரிமுத்து பைக்கை நிறுத்தி இறங்கினார். 

அப்பகுதியில் பாலம் அருகே முயல் ஒன்று ஓடுவதை சரவணன் பார்த்துள்ளார். உடன் அந்த முயலை பிடிப்பதற்காக வேகமாக சரவணன் ஓடினார். ஆனால் எதிரில் ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த டாரஸ் லாரியை கவனிக்காமல் குறுக்கே ஓடினார். வேகமாக வந்த லாரி சரவணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் படுகாயம் அடைந்தார். உடன் அவரை தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே சரவணன் இறந்து விட்டார். தந்தை கண் முன்பே லாரி மோதி மகன் இறந்த சம்பவம் செங்கிப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி