பெண்ணிடம் நகை பறித்த பள்ளி ஆசிரியர் கைது

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி கண்டர்குலமாணிக்கம் கிராமம் சின்னமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் மனைவி சுந்தரவல்லி (வயது 60). ஆட்டையாம்பட்டி அருகே காகாபாளையம் மெயின்ரோட்டில் சாலையோரம் கொய்யாபழம் வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கொய்யாப்பழம் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கொய்யாப்பழம் வாங்குவதுபோல் பழத்தின் விலையை கேட்டுள்ளார். இதையடுத்து திடீரென அந்த வாலிபர் சுந்தரவல்லி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து சுந்தரவல்லி ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பெண் வியாபாரியிடம் நகையை பறித்தது மகுடஞ்சாவடி அருகே ஏகாபுரம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (37) என்பதும், இளம்பிள்ளை அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசார் நந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி