ஊட்டி: 48 சவரன் நகை கொள்ளை - 4 பேர் அதிரடி கைது

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் விவசாயி செல்வம் (எ) பழனிசாமி மற்றும் அவரது மனைவி தனலட்சுமி வீட்டில் இருந்து 48 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை போன சம்பவத்தில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. 

புகாரின் பேரில் புதுமந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைரேகை ஆய்வு மற்றும் மோப்ப நாய் ஆய்வு நடத்தப்பட்டதில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அபய் போர்த்தி, ஈஸ்வர் சிங் கார்டு, அனிதா பாய் மற்றும் அங்கித் சிங் போர்த்தி ஆகியோர் சந்தேகத்திற்குரியவர்கள் என தெரியவந்தது. இந்த நான்கு பேரும் சம்பவத்திற்கு முன்பு தோட்ட வேலைக்காக ஊட்டிக்கு வந்து செல்வம் வீட்டில் தங்கியிருந்தனர். 

கொள்ளையடித்த நகைகளுடன் சத்தீஸ்கருக்கு தப்பியோடிய இவர்களைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் சத்தீஸ்கருக்கு சென்று கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பான கைது நடவடிக்கைக்கு கோவை மேற்கு மண்டல ஐ. ஜி தனிப்படை போலீசாரை நேற்று பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி